×

வலங்கைமான் அருகே இறந்தவர் சடலத்தை வயல் வழியாக மயானத்திற்கு எடுத்து செல்லும் அவலம்-பாதை வசதி செய்து தர கோரிக்கை

வலங்கைமான் : வலங்கைமான் அருகே நேற்று இறந்தவரின் சடலத்தை மயானத்திற்கு விளைநிலங்கள் வழியே எடுத்துச் சென்றனர். மயானத்திற்கு செல்வதற்கு பாதை வசதி இல்லை என்பதால் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து மயானங்களுக்குச் செல்லும் வழித்தடங்களை உறுதி செய்ய அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 ஊராட்சிகளில் 200க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இவைகளில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்பாராதவிதமாக உயிரிழப்பு ஏற்பட்டால் அவர்களை அடக்கம் செய்வதற்கு பல்வேறு காலகட்டங்களில் மயான கொட்டகைகள் அமைத்து தரப்பட்டுள்ளது. இருப்பினும் சில மயானங்களுக்கு செல்வதற்கு போதிய வழித்தடம் இல்லாத நிலையில் உள்ளது. இதன் காரணமாக உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு இறுதி ஊர்வலம் விளை நிலங்கள் மற்றும் நீர்வழிப் பாதைகள் வழியாக செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. குறிப்பாக நீர் வழிப்பாதை வழியாக சடலங்களை மிகவும் ஆபத்தான வகைகளில் எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.குறிப்பாக கீழ விடையல் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியில் இறந்தவர்களின் சடலங்களை ஆற்றினை கடந்து சென்று அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதேபோன்று வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட களத்தூர் ஊராட்சியில் வடக்குத் தெருவில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களில் யாராவது உயிரிழக்க நேரிட்டால் அடக்கம் செய்யும் விதமாக அவர்களது குடியிருப்பில் இருந்து கிழக்குப் பகுதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் மயான கொட்டகை அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மயானத்திற்கு செல்வதற்கு போதிய வழித்தடம் இல்லாததால் விளை நிலங்களின் வழியாக சடலத்தை எடுத்துச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று வடக்கு தெருவைச் சேர்ந்த ஒரு முதியவரின் சடலத்தை சாகுபடி செய்யப்பட்டுள்ள விலை நிலத்தின் வழியாக எடுத்துச் சென்றனர். எனவே விளைநிலங்கள் வழியாக சடலத்தை எடுத்துச் செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. இதுபோன்று குறைகளை களையும் பொருட்டு வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ள மயான கொட்டைகள் மற்றும் அதற்கான வழித்தடங்கள் குறித்து உரிய ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் என்றும், போதிய சாலை வசதி இல்லாத மயான கொட்டைகளுக்கு உடனடியாக சாலை வசதி செய்து தர வேண்டும் எனவும், ஆறு உள்ளிட்ட நீர் வழித்தடங்கள் வழியாக சடலத்தை கொண்டு செல்வதற்கு ஏற்ற வகையில் பாலங்கள் அமைத்து தர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post வலங்கைமான் அருகே இறந்தவர் சடலத்தை வயல் வழியாக மயானத்திற்கு எடுத்து செல்லும் அவலம்-பாதை வசதி செய்து தர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Valankaiman ,Phalama ,Mayanam ,Palla-Path ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் அருகே மயானத்துக்கு சாலை...